Wednesday, February 2, 2011

ராஜா ரவிவர்மா


ராஜா ரவிவர்மா 
JAYBEE'S BIOGRAPHICAL SKETCH 
OF THE GREAT ARTIST'
இந்தியாவின் ஓவியக்கலை ஒரு காலத்தில் மிக உன்னதமாக விளங்கியது. ஆனால் பிற்காலத்தில் ஒரு மாதிரியான உயிரற்ற தன்மையும் கற்பனைகளுக்கே இடமில்லாமல் தத்ரூபத்தன்மையும் இழந்து ஏதோ மாதிரியாக விளங்கியது. 
                       Perspective Drawing எனப்படும் முக்கிய அம்சமும் இல்லாமற் போய்விட்டது.
                      நவீன காலத்துக்கு ஏற்றமுறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்திய பாணி ஓவியக்கலைக்குள் புகுத்துவத்ற்கென்றே அவதார புருஷர் போல ஒருவர் தோன்றினார். 
                      இந்தியாவின் மற்ற பகுதிகள் போல கெரளா இல்லை. அங்குள்ள அரசவம்சங்களில் பல, சங்ககால அரச்மரபின் வழித்தோன்றல்களாக வந்தவை.    
                      கேரளாவின் முக்கிய அரசவம்சத்தின் கிளைவழியாக ஒரு மரபு இருந்தது. 
                    அதில் அந்த அவதார புருஷர் தோன்றினார்.
                    ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் பிறந்தவர். சிறு வயதிலேயே தம்முடைய அரண்மனையின் சுவற்றில் பலவகையான மிருகங்களின் படங்களை வரைவார்.  வீட்டிலேயே சம்ஸ்கிருதம் மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார்.

                    ரவிவர்மாவின் பதின்மூன்றாம் வயதினிலே திருவாங்கூர் அரண்மனையில் நடைபெற்ற சுயம்வரத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்டார். அக்கால அரசவம்ச வழக்கப்படி, அந்த சுயம்வரத்தில் மணமகள், மணமகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சுயம்வரத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு இளைஞனைப் பற்றியும் அறிமுகம் செய்வார்கள். அப்போது ரவிவர்மாவும் அறிமுகம் செய்யப்பட்டார். சம்ஸ்கிருதம் மலையாளம் ஆகிய மொழிகளில் காவியங்கள், கதகளி ஆட்டம், சங்கிதப்பயிற்சி முதலிவற்றில் தேர்ச்சி மட்டுமல்லாது எல்லாவற்றையும் விட சிறப்பாக ஓவியக்கலையிலும் வல்லவர் என்று ராஜா ரவிவர்மா சுட்டிக்காட்டப்பட்டார். 
                    ஆனால் திருவாங்கூர் மகாராஜாவோ, ரவிவர்மா சற்றுக் கறுப்பாக இருப்பதாகச் சொல்லி அவரைத் தட்டிக் கழித்துவிட்டார். 

                    பிற்காலத்தில் ரவி வர்மா இதனைப் பற்றிக் குறிப்பிடும்போது, சொன்னார்:"நான் அரண்மனை, அந்தப்புரங்களின் வாசியாக மாறி, அரசவம்சத்தின் மாப்பிள்ளை என்ற அந்த சொகுசான வாழ்க்கையில் அடைபட்டிருந்தால் என்னை இந்த உலகம் அறிந்திருக்குமா, என்ன?"

                    ராஜா ராஜவர்மா, ரவிவர்மாவுக்குத் தமக்கு ஓவியத்தில் தெரிந்தவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்தார்.

                    திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவிடம் ஒருநாள் ரவிவர்மாவை அழைத்துச்சென்று அவருடன் ஓவியக்கலையில் ரவிவர்மாவுக்கு நல்லதொரு எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவதுபற்றி ஆலோசித்தார். 
                    1862-ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனைக்கு இட்டுச் செல்லப்பட்டு அங்கு எண்ணெய் வண்ண ஓவியக்கலையைப் பயில ஏற்பாட்டாக்கியது. 

                    மகாராஜாவே சொந்த அக்கறையெடுத்து இத்தாலிய நாட்டின் மிகச்சிறந்த ஓவியர்களின் ஓவியங்களையெல்லாம் பரிச்சயப்படுத்தி வைத்தார். 
                    இப்படியே ஒன்பதாண்டுகள் இவ்வகையிலான பயிற்சியில் கழிந்தன. ஆனால் திறமையான ஓவியர்களிடமிருந்து அந்த ஒன்பதாண்டுகள் ஏதும் கற்கவில்லை. 
                    அவராகவே தாம் பார்த்த ஓவியங்களை வைத்துக் கற்றுக்கொண்டார். 
                    கண் பார்ப்பதைக் கை வரைந்துவிடும். 
                    பின்னர் மனம் பார்ப்பதையும் கை வரைந்துவிடக்கூடிய அளவுக்குத் தம்மை வளப்படுத்திக் கொண்டுவந்துவிட்டார். 
                    அவ்வமயத்தில் இன்னொரு அரசகுடும்பத்தைச் சேர்ந்ததொரு பெண்ணை மணந்துகொண்டார். 

                    சென்னையில் ஓரிடத்தில் பல எண்ணெய் வண்ண ஓவியங்கள் விலைக்கு வந்தன. 
                    எண்ணெய் வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினர். 
                    மேல்நாட்டின் ஓவியக்கலையில் மிகவும் மவுசும் கௌரவமும் அதிகமாகப் பெற்றவை எண்ணெய் வண்ண ஓவியங்களே.
                    இந்தியாவில் எண்ணெய் வண்ண ஓவியக்கலை இன்னும் போதுமான முறையில் அறிமுகப்படுத்தப்படவில்லை. அவற்றில் ஏதோ ஒரு மேல்நாட்டுத்தனம் ஒட்டிக்கொண்டு இருந்தது. 
                    அக்காலத்தில் திருவாங்கூரில் அந்த வித்தையை நன்கு அறிந்த ஆள், மதுரை ராமசாமி நாயக்கர்தான். 
                    அவரை ரவிவர்மா அணுகினார். 
                    ஆனால் தமக்கு ஒரு போட்டியாளன் உருவாகுவதை நாயக்கர் விரும்பவில்லை. ஆகவே உதவ மறுத்துவிட்டார். 
                    இவ்வாறு தாம் ஒதுக்கப்பட்டது ரவிவர்மாவின் மனதைப் பெரிதும் பாதித்துவிட்டது.  தாம் ஒரு பெரிய எண்ணெய் வண்ண ஓவிய மேதையாக வேண்டும் என்ற வேட்கையை அது தூண்டியது.

                    திருவனந்தபுரத்தில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அறிந்த இன்னொருவரும் இருந்தார். நாயக்கரின் மாணவர்; ஆறுமுகம் பிள்ளை. ரவிவர்மாவுக்கு உதவவேண்டும் என்ற ஆவல் அவருக்கு இருந்தது. ஆனால் தம்முடைய குருவின் அனுமதியின்றி எப்படிச் செய்வது என்ற தயக்கமும் மிகவும் இருந்தது. இரவு நேரங்களில் யாருமறியாமல் ரவி வர்மா இருந்த அரண்மணைக்கு வந்து ரகசியமாக ரவிவர்மாவுடன் தன்னுடைய வித்தையைப் பகிர்ந்துகொண்டார்.
 

                    1868-ஆம் ஆண்டுதான் ரவிவர்மாவுக்கு ஒரு break-through என்று சொல்லப்படும் அதிர்ஷ்டம் கிட்டியது. 
அவ்வாண்டு, ஆயில்யம் திருநாள் மகாராஜாவைப் பார்ப்பதற்காக தியோடோர் ஜென்சன் என்னும் ஓவியர் வந்தார். அன்றைய நாளைய ஐரோப்பிய ஓவியர்களில் ஒருவர். Portrait-painting எனப்படும் ஓவியத்துறையை மேற் கொண்டவர். அக்காலத்தில் பணம் பதவி பவுசு படைத்த மனிதர்கள், தங்களின் படங்களைப் பெரியதும் சிறியதுமாக வரையச்செய்து அலங்காரமான சட்டத்தைப் போட்டு மாட்டிவைப்பது ஒரு பெரிய மனுஷ தோரணையாக இருந்தது. ஆகவே இந்த portrait ஓவியர்களுக்குப் பெரும் மவுசு இருந்தது. (பவுசு & மவுசு; இந்த இரு சொற்களையும் உற்று நோக்கவும்)
                    ஒவ்வொரு படத்துக்கும் ஆளைப் பொறுத்தும் ஓவியரைப் பொறுத்தும் பெரும் பெரும் தொகையே கட்டணமாகச் செலுத்தப்பட்டது. இதையெல்லாம் 'ஓவியக்'கூலி' என்றா சொல்லமுடியும்? 

                    ஜென்சன் அப்படியன்றும் பிரமாதமான ஓவியர் இல்லை என்பது சீக்கிரமே புலனாகியது. 
                    ஆயில்யம் திருநாள் மகாராஜாவையும் மகாராணியையும் ஜென்சன் வரைந்திருந்தார். அதன்பின்னர் ரவிவர்மா அவர்களை வரைந்தார். ரவிவர்மாவின் ஓவியத்தின் முன்னால் ஜென்சனின் ஓவியம் எடுபடவில்லை. 
                    ஜென்சனின் உத்திகளை ரவிவர்மா அருகிருந்து கவனித்துக்கொண்டார். 
                    ஆறுமுகம் பிள்ளையிடமிருந்து அவர் ஏற்கனவே அறிந்துவைத்திருந்ததால் எளிதாக அவருக்கு அந்த உத்திகள் பிடிபட்டன. 
                    ரவிவர்மா ஏற்கனவே எந்தவிதமான பயிற்சியும் இல்லாத காலகட்டத்தில் வரைந்திருந்த ஓவியங்களை ஒருநாள் ஜென்சன் பார்த்துவிட்டார். பயிற்சி இல்லாமலேயே இந்த அளவுக்குச் சிறப்பாக வரையமுடியும் என்றால்.....?
                    அவ்வளவுதான். 
                    ரவிவர்மாவுக்குச் சொல்லிக்கொடுப்பதை நிறுத்திவிட்டார். 
                    காரணம்? 
                    நாயக்கர் மாதிரிதான். 
                    ஆனால் ஜென்சன் சொன்ன காரணம் -
                    'எண்ணெய் வண்ணம் என்பது கற்றுக்கொடுக்கப்படமுடியாத கலை' என்ற சாக்குப்போக்குச் சொல்லிவிட்டார். 
                    இருப்பினும் ஜென்சன் தாம் வரையும்போது உடனிருந்து பார்க்க ரவிவர்மாவை விட்டார். 

                    எண்ணெய் வண்ணத்தை ரவிவர்மா காணும்வரைக்கும் அந்த மாதிரியான வண்ணங்களைப் பற்றி அவருக்குத் தெரியவே தெரியாது. அவருக்கு வேண்டிய வண்ணங்களை ராஜா ராஜவர்மாதான் தயாரித்துக்கொடுத்தார். 
                    இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து அந்த வண்ணங்கள் சுதேசிமுறையில் செய்யப்பட்டன.

                    'இவற்றிலிருந்து வண்ணங்களை எப்படிச் செய்யலாம்?' என்ற ஐயம் தோன்றும்.
                    மருத்தோன்றி இருக்கிறது. அதிலிருந்து ஹென்னா சாயம் என்ற செவ்வண்ணம் செய்யப்பட்டது. 'அவுரி' என்னும் செடியின் பட்டையிலிருந்து நீல நிறம் கிடைத்தது. செம்பரத்தம்பூவின் சாற்றிலிருந்தும் வண்ணம் செய்யலாம். மண்? செம்மண் காவி இருக்கிறது அல்லவா? களிமண்ணிலேயே வெள்ளியிலிருந்து கபில நிறத்திலிருந்து சாக்லேட் நிறம் வரைக்கும் பலதரப்பட்ட நிறங்களில் இருந்தது. அடுப்புக்கரி? மணிக் கற்கள். மாலச்சைட், டர்க்வாய்ஸ்செந்தூரம், மஞ்சள், சுண்ணாம்பு, சுண்ணாம்பு கலந்த மஞ்சள்கிழங்கு, நீலத்தூள், ப்ரஷியன் நீலம், இதே போல பல மூலப்பொருட்கள் உள்ளன. அவற்றின் கலவைகளிலிருந்து இன்னும் அதிக நிறபேதங்களைப் பெறலாம். 

                    இருப்பினும் எண்ணெய் வண்ணம் என்பது இந்தியாவுக்குப் புதிய கலையாகத்தான் இருந்தது.
                    அடுத்து, சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்தார். 
                    அந்த ஓவியம் பூர்த்தியாகிய நாளன்று, அதனைக் கண்ட அனைவரும் அதனுடைய நேர்த்தியால் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர் 
                    ஆளுனர் கூறினார், 
                    "ஒரு குறிப்பிட்ட புகழ்வாய்ந்த ஐரோப்பிய ஓவியர் என்னை வரைவதற்காக நான் பதினெட்டு முறை அமரவேண்டியிருந்தது. (Portrait வரைவதற்கு ஒரு குறிப்பிட்ட pose என்னும் பாவனையில் ஆடாது அசையாது அமர்ந்திருக்கவேண்டும்). ஆனால் அவரால் ரவிவர்மாவின் ஓவியத்தில் காணப்படும் தத்ரூபத்தில்பாதியளவுகூட கொண்டுவரமுடியவில்லை. Portrait ஓவியத்தை இவ்வளவு சீக்கிரத்தில் வரையமுடியும் என்பதை ரவிவர்மா வரைந்ததிலிருந்துதான் இப்போது தெரிந்துகொண்டேன்." 
    
                    இருப்பினும் இந்த எண்ணெய் வண்ண உத்திகளை இன்னும் செம்மைப் படுத்தவேண்டும் என்று உணர்ந்தார். அந்தத் துறையை அவருடைய திருப்திக்கு ஏற்ப முழுமையாக அகப்படுத்திக்கொள்வதற்கு இன்னும் பல படிகள் இருக்கின்றன என்ற எண்ணம் அவருடைய மனதை மிகவும் உறுத்தியது 
                    ஆகவே ரவிவர்மா, மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று தியானம் செய்ய தீர்மானித்தார். 

                    திருவனந்தபுரத்தின் எல்லைக்கு அப்பால் இருந்தது மூகாம்பிகை ஆலயம்.     அந்த சமஸ்தானத்தைவிட்டு வெளியேறுவது அதுவே ராஜா ரவிவர்மாவுக்கு முதல் தடவை. 
                    மூகாம்பிகை கோயிலிலிருந்து திரும்பும்போது கோழிக்கோடு நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த திழக்கேப்பத்து கிருஷ்ணன் மேனொனை வரைந்தார். அதற்குரிய கட்டணத்தையும் அவர் பெற்றார். ஓவியம் வரைந்ததற்காகக் கட்டணம் கிடைத்தது அதுவே முதல்தடவை. 
                    அரசமரபைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு ஓவியக்கூலி பெறுவதன்மூலம் ஒரு பெரிய மரபையும் ராஜா ரவிவர்மா உடைத்துவிட்டார்.

                    அதன்பின்னர் திருவனந்தபுரத்துக்கு மனைவியுடன் வந்து தங்கிவிட்டார்.
 ரவிவர்மா ஓவியம் வரைவதை ஒரு யோகம் பயில்வதைப் போன்றே செய்வார் 
                    விடியும்போது தூரிகையை எடுத்துக்கொள்வார். 
                    தூரிகையைப் பிடிப்பதற்காகவே விடிவதற்காகக் காத்திருப்பார். 
                    சகோதரர் ராஜா ராஜவர்மாவும் உடன் இருப்பார். ஓவியம் பயில்வதோடு பழம்பெரும் வித்வான்களின் இசையையும் விரும்பிக் கேட்கச் செல்வார்; கதகளி நாட்டியத்தை தவறாமல் பார்ப்பார். பழஞ்சுவடிகளை எடுத்துவைத்து ஆராய்வார். பழைய நாடக நூல்களை ஆர்வமுடன் படிப்பார்.

                    ஒரு தவமாகவும் யோகமாகவும் பயிலப்பட்ட ஓவியக்கலையில் ராஜா ரவிவர்மா ஒரு ராஜரிஷியாகவே விளங்கி சித்தி பெற்றார். 
                   அம்பிகையின் பேரருளும் அவருக்குப் பூரணமாக இருந்தது. 
                    சகலகலாவல்லியாகவும் சரசவாணியாகவும் சர்வக்ஞபீடத்தின் அதிஷ்டானமாக விளங்கிய ஆலயத்தின் நாயகியாகவும் சதுஷஷ்டிகலாமயியாகவும் விளங்கிய அன்னை மூகாம்பிகையின் கடாட்சத்தால் ஓவியக்கலையில் பல புதிய பரிமாணங்களையும் கண்டு பல புதிய வரம்புகளையெல்லாம் எட்டிவிட்டார்.

                    ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை அளித்துக் கௌரவித்தார். 
                    ஓவியத்துக்காக இந்த விருது அளிக்கப்பட்டது அதுவே முதற்தடவை. இதனால் ராமசாமி நாயக்கர் காழ்ப்புக்கொண்டார். பட்டத்து இளவரரசரான விசாகம் திருநாளுக்கும் மகாராஜாவின் செய்கையை ஏற்றுக்கொள்ள இலவில்லை 

             1873-இல் சென்னை ஆளுனராகிய ஹோபார்ட் பிரபு ஒரு சர்வதேச ஓவியக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தார்.
 'கேரளத்து அழகி' ஒருத்தியை வண்ண ஓவியமாக்கி அந்தக் கண்காட்சிக்காக ரவிவர்மா எடுத்துச ்சென்றார்அத்துடன் இன்னொரு ஓவியமும் உடன் சென்றது.
                    திருவாங்கூர் மன்னர் சென்னையிலிருந்த திவான் பகதூர் ரகுநாதருக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார். 
                    திவான் பகதூர் ரகுநாதரின் வீட்டில் ரவிவர்மா தங்கினார். திவானே மொழிபெயர்ப்பாளராக விளங்கினார். ஏனெனில் மலையாளம், தமிழ், சமஸ்கிருதம் மட்டுமே அறிந்திருந்த ரவிவர்மாவுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. பிறக்காலத்தில்தான் அவர் ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் பெற்றார்.

              1870-1780 ஆண்டுகளில் கிளிமானூரிலேயே தங்கி நிறைய ஓவியங்களைப் படைத்தார். பாராட்டுக்கடிதங்கள் அவருக்கு ஏராளமாக வந்தன. அவருக்காகவே கிளிமானூரில் ஓர் அஞ்சலகத்தைத் திறக்க நேரிட்டது.

                    ஆளும் அரசமரபிற்குள் பங்காளிச் சண்டை ஏற்பட்டது. ஆட்சி புரிந்துகொண்டிருந்த ஆயில்யம் திருநாள் மகாராஜாவுக்கும் அவருடைய தம்பியும் அரச வம்ச வாரிசும் ஆகிய விசாகம் திருநாளுக்கும் இடையே போட்டியும் சச்சரவும் நிலவின. இந்தப் போட்டியில் ராஜா ரவிவர்மா தலையிடவில்லை. இருப்பினும் ஆயில்யம் திருநாளுக்கு ரவிவர்மாமேல் வெறுப்பு ஏற்பட்டது. 
                    இதை உணர்ந்த ரவிவர்மா தம்முடைய மனைவியையும் அழைத்துக்கொண்டு மாவேலிக்கரை என்னும் ஊரில் குடியேறினார். சில காலம் கழித்து ஆயில்யம் திருநாள் தம்முடைய தவறை உணர்ந்து ரவிவர்மாவை மீண்டும் அழைத்துவைத்துக்கொண்டார். 

                    ஆயில்யம் திருநாள் மகாராஜா 1880-ஆம் ஆண்டில் இறந்தபிறகு விசாகம் திருநாள் பட்டத்துக்கு வந்தார். ஆனால் அவர் எப்போதுமே ரவிவர்மாவை நேசித்தது கிடையாது. விரைவில் ரவிவர்மாவின் ஓவியக்கூடத்தை மூடத்து மடம் என்னும் இடத்திற்கு மாற்றிவிட்டார். அங்குள்ள வீட்டில் ரவிவர்மாவின் ஓவியங்கள் கொட்டிவைக்கப்பட்டன. நூலாம்படையும் தூசியும் படிந்து கரையானுக்கு அந்த உன்னத படங்கள் இரையாகி மக்கிப்போயின.

                    இருப்பினும் ஊக்கம் குன்றாமல் ரவிவர்மா ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஓவியக்கலையில் ஆழ்ந்து சிருஷ்டியில் ஈடுபட்டார்.

                   1873-இல் சென்னையில் நடந்த ஓவியக்கண்காட்சியில் அவருடைய ஓவியத்துக்கு  முதற் பரிசு கிடைத்தது. 
                    அதே ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச ஓவியக்கண்காட்சியிலும் முதற்பரிசு பெற்று, தன்மூலம் உலகப்புகழ் பெற்றார்.

                    1870-1780 ஆண்டுகளில் கிளிமானூரிலேயே தங்கி நிறைய ஓவியங்களைப் படைத்தார். பாராட்டுக்கடிதங்கள் அவருக்கு ஏராளமாக வந்தன. அவருக்காகவே கிளிமானூரில் ஒர் அஞ்சலகத்தைத் திறக்க நேரிட்டது.

                    ரவிவர்மாவால் ஓவியமாக வரையப்படுவதை ஒரு மிகப்பெரிய பெருமையாகக் கருதினார்கள். அவருடைய ஒரிஜினல் ஓவியம் தம் வீட்டில் அல்லது கண்காட்சி சாலையில் தொங்குவதை ஓர் உயர்ந்த அந்தஸ்த்தின் சின்னமாக நினைத்தார்கள்.
 திருவாங்கூரிலிருந்த அரண்மனைகளில் இருந்த பெண்களையும் ஆண்களையும் தம்முடைய படங்களுக்கு மாடல்களாக நிறுத்திக்கொண்டு வரைவதுண்டு. அக்கால அரச மரபிலிருந்தவர்கள், அரண்மனையிலிருந்தவர்கள் போன்றோர் அணிந்திருந்த ஆடை அணிகளையே தம்முடைய ஓவியங்களில் இருந்த தெய்வங்களுக்கும் மனிதர்களுக்கும் அணிவித்துப் பார்த்தார். 
 மரபுக்கு விரோதமான சில உருவகங்களையும் செய்திருந்தார். 

                    மீசைக்கார பரமசிவன், தலையை விரித்துப்போட்ட சரஸ்வதி, லட்சுமி போன்ற தோற்றங்கள் மிகவும் பிரபலமாகிப் போயின. இப்போதும்கூட பெரும்பான்மையான ஓவியர்களும் சுதை வேலைக்காரர்களும் இதே பாணியைத்தான் கடைபிடிக்கிறார்கள். சினிமாவிலும் சாமி சீரியல்களிலும் இதே பாணியில்தான் எல்லாச்சாமிகளும் வருவார்கள். 

                    சிவகாசி கொண்டைய  ராஜா, அவருடைய சீடர்கள் இந்த மரபைக் கடைபிடிப்பதில்லை. அவர்களுடைய சிவன், புராதனமான கோயிலில் காணப்படும் கற்சிலைகளில் உள்ள சிவனைப்போல சடாமகுடமும், மீசையற்ற முகமும், மூடிவைத்த மூன்றாவது கண்ணுமாக இருப்பார். காஞ்சி காமாட்சி முதல் பெண் தெய்வங்கள் அனைவரும் தலையை விரித்துப்போடாமல் ஒழுங்காக சீவிமுடித்து சிங்காரித்துக் கிரீடமும் சூட்டிக்கொண்டிருப்பார்கள்.

                    ராஜா ரவிவர்மா ஓவியத்தை வரைவதே ஓர் அலாதியான விஷயமாக இருந்திருக்கிறது. 

                    அது ஏதோ ஒரு சடங்குபோல் தோற்றமளிக்கும். ஆனால் காலத்தின் மாற்றங்களுக்கேற்ப விளங்கியது. சமயம் என்பது அவரைப் பொறுத்தவரைக்கும் ஏதோ நம்பிக்கையோ அல்லது ஆன்மீகத் தத்துவங்களோ மட்டுமில்லை. அது அவருடைய வாழ்வு. அப்படித்தான் அவர் அதைப் பார்த்தார். சமயத்தை அவர் தம்முடைய இயல்புகளில் ஒன்றாக்கிக்கொண்டார். ஆனால் ஒன்று. அக்காலத்து ஆட்கள் நடந்துகொண்டது போலில்லாமல் காலம் போகிற போக்கில் சமுதாய மாறுதல்களுக்கு ஏற்ப, அந்த மாறுதல்களில் பலவற்றுக்குத் தாமே காரணராகவும் நடந்து கொண்டார். அவர் படைத்த ரவிவர்மா பாணி ஓவியங்களை அவரால் வரைய முடிந்ததற்கு அந்த மாதிரியான மனப்பான்மை ஒரு பெரிய காரணம்தெய்வங்களையெல்லாம் மனித இயல்புகளோடு அவர் ஓவியத்தில் கொண்டுவர முடிந்ததிருக்கிறதே. அது பெரிய விஷயமல்லவா?

                    அவர் ஒரு க்ஷத்திரியர். ராஜவமசத்தில் தோன்றியவர். அவரிடம் நெருங்குவதுகூட 
அரிதான விஷயம். ஓவியம் வரையும்போது பெரும்பான்மையான ஓவியர்கள் எந்த வகையான இடைஞ்சல்களையோ யாரும் பார்ப்பதையோ அனுமதிக்கமாட்டார்கள். அவர்களின் மன ஒருமைப்பாடும், கை லாகவமும் ·போக்கஸ¤ம் கெட்டுவிடும். 

                    ஆனால் ரவிவர்மா அப்படியல்ல.

                   அவர் மும்முரமாக வரைந்துகொண்டிருக்கும்போது யார் வேண்டுமானாலும் அவருடைய ஓவியக்கூடத்துக்குள் செல்லலாம். அவரிடம் பேசலாம்; ஓவியத்தைப் பற்றி எதையும் கேட்கலாம். 

                    படம் வரைவதற்கு முன்னர் அவர் அந்த மனோநிலையை அடையவேண்டி சில கோட்பாடுகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை வைத்திருந்தார். 
                    விடிவதற்கு முன்னரேயே விழித்துக்கொள்வார். விடியும் முன்னரேயே எழுந்துவிடுவார்.
                    எப்போதும் நல்ல இளம் தளிர் வெற்றிலைகளை வாசனைச் சரக்குகளுடன் சேர்த்து 
வாயில் போட்டு மென்றுகொண்டும் குதப்பிக்கொண்டும் வரைந்துகொண்டிருப்பார். 
                    ஓவியம் வரைய ஆரம்பிக்கும் முன்னர் முதலில் வெற்றிலையில் சேர்மானங்களைச் சேர்த்துக்கொண்டு சாவதானமாக மடித்து மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் வாயில் போட்டு மென்று, மிகவும் ஆனந்த போகத்தில் மிதந்துகொண்டு வெற்றிலையைக் குதப்புவார். படம் வரைவதற்குத் தூரிகையை எடுப்பதற்கு முன்னர் விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட மூக்குப்
பொடியில் ஒரு பெரிய சிட்டிகையை எடுத்து இரு நாசிகளிலும் அனுபவித்து இழுத்து விட்டுக்கொண்டு, தன் பஞ்சகச்சத்தின் நுனியால் மூக்கின் நுனியைத் துடைத்துவிட்டுக் 
கொள்வார். அதன் பின்னர் ஏதோ ஒரு உலகைல் சஞ்சரித்தவண்ணம் கண்கள் ஏதோ கனவு காணும் தன்மையுடன் படம் வரையும் திரையைப் பார்த்துக்கொண்டு தூரிகையைக் கையில் எடுப்பார். சாவகாசமாக வண்ணங்களைக் கலந்துகொள்வார். அதன்பின்னர் தூரிகையின் வீச்சும் தடவுதலும் வருடுதலுமாக வெவ்வேறு தாளக்கட்டில் நர்த்தனம்போல் நிகழும்
                    அந்தக் காலத்து சமுதாயத்தின் வெவ்வேறு தட்டுக்களைச் சேர்ந்த மக்கள் கூட்டம் 
ஒன்று அவர் ஓவியக்கூடத்தில் அருகில் நின்று பார்த்துக்கொண்டிருக்கும். அவர்கள் கேட்பன வற்றுக்கெல்லாம்  அவர் பதில் சொல்லிக்கொண்டிருப்பார். அவருடைய ஓவியம் சம்பந்தமாக யாராவது உருப்படியான யோசனைகளைச் சொன்னால் அந்த யோசனைகளை ஏற்றுக்கொண்டு தேவையான மாறுதல்களைச் செய்துகொள்வார். அவ்வப்போது ஓவியத்தைப் பற்றிய கருத்துக்களைப் பார்வையாளர்களிடம் கேட்டுக்கொண்டிருப்பார்.....

                    ஷாஜி கருன் என்பவர் ஒரு ஹிந்திப் படத் தயாரிப்பாளர். அவர் சூரியமுகி என்னும் 
பெயரில் ஒரு படம் எடுக்கப்போகிறார். 
                    ரவிவர்மாவின் வாழ்க்கை வரலற்றின் ஒரு பகுதி என்று ஷாஜி கூறுகிறார். 
                    தமது இருபத்தைந்தாவது வயதில் ரவிவர்மா சர்வதேச ஓவியக்கண்காட்சியில் முதற்
பரிசு பெற்றார். அவர் ஓவியத்துறையில் முன்னேறவேண்டும் என்ற அவாவினால் பம்பாய்க்குச் சென்றார். 
                    அங்கு அவர் தங்கியிருக்கும் அங்கிருந்த நாட்டியப்பெண்கள் சிலரை மாடல்களாக வைத்து ஓவியங்களை வரைந்தார். 
                    அவர்களில் ஒரு பெண்மணி சுகந்தி அல்லது சுகுணாபாய். கோவாவைச்   சேர்ந்த மஹாராஷ்ட்ரப் பெண். 
                    அவருடன் ரவிவர்மாவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகச் சொல்கிறார். 
                    ரவிவர்மாவின் மிகப்பிரபலமான சரஸ்வதி, லட்சுமி ஆகிய தேவியரின் உருவப
்படங்களுக்கு மாடலாக இருந்தவர் சுகுணாபாய்தான். 
                    அந்த இரண்டு படங்களையும் பார்த்தால் அவற்றிலுள்ள இரண்டு உருவங்களும் முகங்களும் ஒரே சாயலாக இருப்பதைக் காணலாம். 

                    கீழ்க்கண்ட யூஆரெல்லில் அந்த இரண்டு படங்களையும் காணலாம்.
 ஆடை குறைந்த நிலையில் உள்ள படங்கள் சிலவற்றிற்கும் அந்தப் பெண்மணி மாடலிங் செய்திருக்கிறார் என்று சொல்கிறர்கள். 
                    அந்தக் காலகட்டத்தில் ஆஷாடபூதிகளாகவும் ஆசாரமிக்கவர்களாகவும் விளங்கிய இந்துக்கள் சிலர் அவருடைய படங்கள் ஆபாசமானவை என்று வழக்குத் தொடர்ந்தனர். 
                    ரவிவர்மா தாமே சொந்தமாக அந்த வழக்கில் வழக்காடி வழக்கில் வென்றார்.
                    ஆனால் தமது மாடல் தோழியை அவர் இழக்க நேரிட்டது.     இந்தக் கதையை வைத்து ஒரு ரோமாண்டிக் படமாக எடுக்க ஷாஜி திட்டமிட்டிருக்கிறார்.
 1901-ஆம் ஆண்டில் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் உதய்பூருக்குச் சென்று உதய்பூர் மஹாராணாவின் சிற்றசர் ஒருவருடைய படத்தையும் அவருடைய குலத்தவராகிய ரஜபுத்திர மன்னர்களின் படங்களையும் வரைந்தார். 
                    ராணா ·பட்டே சிங்கை அமரச்செய்து அவரைத் தொடர்ந்து மூன்று மணி நேரம் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தார். அதன் பின் அந்த இடத்தை விட்டுச்சென்றார். பின்னர் அவருடைய ஸ்டூடியோவில் இருந்துகொண்டு மனதில் பதிந்திருந்த மன்னரின் உருவத்தை மூன்றே நாட்களில் ஓவியமாக வரைந்து  முடித்தார்.

                    ஹைதராபாதின் இந்து சிற்றரச மரபுகளில் ஒன்றைச் சேர்ந்தவர் ஒருவர், ரவிவர்மாவை ஹைதராபாதுக்கு அழைத்தார். அங்கு அவர் நிஜாமின் அரண்மனையில் இருந்த ஓவியக்கூடத்தில் பல காலமாகப் பல இடங்களிலிருந்தும் சேகரித்துவைக்கப்பட்ட ஓவியங்களைக் காட்டினார். பாரசீக, முகலாய, ரஜபுத்திர, பீஜாப்பூரிய, மஹாராஷ்ட்ரிய மரபு ஓவியங்களை அவர் பார்வையிட்டார். 
                    அங்கு இருந்துகொண்டு ரவிவர்மா சில ஓவியங்களை வரைந்தார். 

                    அவருடைய லிதோகிரா·ப் அச்சகத்தின் மூலம் அவருடைய ஓவியங்களின் பிரதிகள் ஏராளமாகப் பரவின. எந்த அளவுக்கு அவை பரவினவோ அந்த அளவுக்கு அவற்றின் போலிப்பிரதிகளும் பல இடங்களிலிருந்து வேளியாகின. இதனால் காப்பிரைட் உரிமையை அந்தப் பிரதிகளுக்கு ஏற்படுத்திக்கொண்டார். 
    
             1902-இல் திருவாங்கூரில் தங்கியிருந்துவிட்டு, பம்பாய்க்குச் சென்று ரவிவர்மா லிதோக்ரா·பிக் ப்ரெஸ் என்னும் அச்சகத்தைப் பார்க்கச் சென்றார். பம்பாயிலிருந்து சென்னை திரும்பிய பின்னர் அங்கே சில மாதங்கள் தங்கி இன்னும் சில ஓவியங்களை வரைந்தார். சென்னை கவர்னர் ஹேவலாக்கின் படத்தை அப்போது வரைந்தார். 

                    ஏற்கனவே அவருடைய ஓவியம் சிகாகோவில் நடைபெற்ற சர்வதேச ஓவியக்கண்காட்சிகளில் இருமுறை தங்கப் பதக்கங்களைப் பெற்றிருந்தது.

                    1903-ஆம் ஆண்டில் முதன்முறையாக அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஒரு சிறிய புத்தகமாக வெளியிட்டார்கள். அதில் மோனோக்ரோம் எனப்படும் ஒற்றை வண்ணத்தில் 23 படங்களைப் போட்டிருந்தார்கள். 

               1904-ஆம் ஆண்டில் அவருக்கு கய்ஸார்--ஹிந்த் என்ற உயரிய விருது கொடுக்கப்பட்டது. ஓர் ஓவியருக்கு ஓவியக்கலைக்காக அந்த விருது கொடுக்கப்பட்டது அதுவே முதல் தடவை.    

                    பல படங்களின் காட்சிகள் உயிரோட்டமும் வேகமும் துடிப்பும் Dynamism மிக்கவையாகவும் விளங்கின. 
 சென்னையில்1904 -ஆம் ஆண்டு ஓர் ஓவியக்கண்காட்சி நடைபெற்றது. தம்முடைய படங்களை அதற்கு நேரடியாக அனுப்பிவைத்தார். 
                    உடல்நிலை சீர்கெட்டுக்கொண்டிருந்தது. 
                    ஒரிஜினலாக வரைந்தது பல ஓவியங்கள். அவை போக பழைய புகைப் படங்கள், மங்கிப்போன படங்கள் முதலியவற்றைப் புதிதாக வரைந்தும் கொடுத்தார். அத்துடன் ஒரிஜினல் படங்களுக்குப் பிரதிகளையும் வரைந்துகொடுத்தார். அவையெல்லாமே ஒரிஜினலைவிட உயிரோட்டம் மிக்கவையாக இருந்தன. 

                    ஒருநாள் ராஜராஜ வர்மா குடற்புண்ணால் இறந்துபோனார்.

                    தம்முடைய அறுபதாம் வயதிலிருந்து சன்னியாச வாழ்க்கையை மேற்கொள்ள ரவிவர்மா விரும்பியிருந்தார். ஆசிரமம் கட்டிக்கொள்வதற்காகக் குற்றாலத்தின் அருகே நிலம் வாங்கிப்போட்டிருந்தார். ராஜவர்மாவின் இறப்பு அவரை நிலைகுலையச் செய்தது.
                    அவருடைய முந்திய காலப்படங்களில் தஞ்சாவூர் சாயலுடன் மேற்கத்திய ஓவியமுறை கலந்திருந்தது. 

                    பம்பாயில் இருந்தபோது அங்கு அவர் சமுதாயத்தின் வெவ்வேறு தட்டுக்களைச் சேர்ந்த வேவ்வேறு இனத்துப்பெண்களின் ஓவியங்களை வரைந்தார். பல நாட்டியக்காரப் பெண்களை மாடல்களாக வைத்து வரைந்திருக்கிறார். பெண்களை ஆடைக்குறைவான நிலையில் வரைந்திருக்கிறார். அதனாலேயே ஆசாரமிக்க இந்துக்களின் கோபத்துக்கு ஆளாகினார். அவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில் தமக்காகத் தாமே வழக்காடி வென்றார். 

                    பம்பாயில் அவருக்கு மாடலாக நின்ற பெண்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவள் சுகந்தி அல்லது சுகுணாபாய் என்னும் பெண். கோவாக்காரப் பெண். அவருக்கு மிகவும் விருப்பமான மாடலாக அவள் திகழ்தாள். அவருடைய புகழ்பெற்ற ஓவியங்களாகிய சரஸ்வதி, லட்சுமி ஆகியவற்றின் மாடலாக சுகுணாபாயே இருந்தாள். 
                   
அந்தப் படங்கள் இன்றளவும் நின்று நிலவுகின்றன. பல்வேறு வீடுகளில் பூஜையில் அந்தப் படங்கள் இருக்கின்றன. தற்சமயம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ஓவியங்களாக அவை விளங்குகின்றன.
                      இந்திய முழுவதையும் சுற்றினார். அவருடைய ஓவியங்களுக்கு நல்ல கற்பனை வளமும் ஓவியங்களுக்கான இலக்குகளும் தீம்களும் தேடுவதில் கவனத்தைச் செலுத்தினார்.       

                    சுற்றுப்பயணம் முடிந்து திரும்பியவுடன் பல மாஸ்டர்பீஸ் ஓவியங்களை வரைந்தார். நளதமயந்தி, சந்தனு மன்னனும் மச்சகந்தியும், சந்தனுவும் கங்கா தேவியும், ராதா மாதவன், 
கம்ஸ மாயை, கிருஷ்ணனும் தேவகியும், சுபத்ரையும் அர்ஜுனனும், துரௌபதை துயில்
 உரிதல், மேனகையும் விஸ்வாமித்திரரும், சிம்மத்தின்மீது பரத மன்னன் முதலிய புகழ்
பெற்ற ஓவியங்களை அப்போது அவர் வரைந்தார் 
மைசூர் மன்னருடனும் ரவிவர்மாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. அவருடைய குடும்பத்தினரின் ஓவியங்களையும் வரைந்திருக்கிறார்.

                1881-ஆம் ஆண்டு பரோடா மன்னராகிய கெய்க்வாட் அழைப்பின்பேரில் அங்கு நடைபெற்ற முடிசூட்டு விழாவுக்குச் சென்றார். அவருக்கும் அந்த மன்னருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டது. அங்கிருக்கும்போது 14 படங்களை வரைந்தார். அவற்றை வரைவதற்கென பல இடங்களுக்கு அவர் சென்றார். அதற்கான வெகுமானமாக ஐம்பதினாயிரம் ரூபாயை கெய்க்வாட் மன்னர் கொடுத்தார். 

                    ரவிவர்மாவின் ஓவியங்களுக்குப் பெரும் வரவேற்பும் மதிப்பும் இருந்தது. ஆகவே பரோடாவின் திவானாகிய மாதவ் ராவின் யோசனையின்பேரில் ஒரு லிதோகிரா·ப் அச்சகம் உருவாக்குவது என்று முடிவாகியது. 
                    அந்தத் தொகையை வைத்து பம்பாயில் இரண்டு ஜெர்மன்காரர்களின் உதவியோடு அவர் ஒரு லிதொகிரா·ப் அச்சகத்தை ஏற்படுத்தினார். இதன்மூலம் எடுக்கப்பட்ட ஓவியப்பிரதிகள் உலகெங்கும் பரவின. அத்துடன் வசதிக் குறைவானவர்களும்கூட ரவிவர்மாவின் ஓவியங்களின் பிரதிகளை வாங்கி வைத்துக ்கொள்ளமுடிந்தது.

                    1894, 1895-ஆம் ஆண்டில் ரவிவர்மாவும் அவருடைய சகோதராகிய இன்னொரு ராஜா ராஜவர்மாவும் இந்திய நாட்டைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினர். இந்தப் பயணம் முடிந்து திரும்பியவுடன் இன்னும் பல ஓவியங்களை ரவிவர்மா வரைந்தார். 
                    அவருடைய ஓவியங்களை அச்சிடுவதற்கென ஒரு அச்சகத்தை உருவாக்கியிருந்தனர். ஆகவே விற்பனைக்குரிய படங்களும் வரையப்பட்டன. பிற்காலத்தில் ஏராளமாகத் தோன்றிய சாமிப்படங்களின் மூலப்படங்கள் அப்போது வரையப்பட்டன.    
                     Calender Pictures என்னும் ஓவியத்துறை இந்தியாவில் தோன்றுவதற்கே ரவிவர்மாதான் மூல காரணம். 
          

                    ஆர்டருக்காக வரைவதையும் குறைத்துக்கொண்டார். சிலருக்கு மட்டுமே செய்துகொடுத்தார். மேவார் மகாராணா அவரை அழைத்து ரஜபுத்திர மன்னர்களின் படங்களை வரையச்செய்தார். 

                    அதன்பின்னர் கிளிமானூருக்குத் திரும்பி ரவிவர்மா, ஆயுர்வேத வைத்தியம் செய்துகொண்டார். நீண்ட பயணங்களை மேற்கொள்ளக்கூடாது என்று வைத்தியர்கள் கட்டளையிட்டனர்.    

                    தம் தம்பியின் மரணத்துக்குப் பின்னர் தம்முடைய உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் மீண்டும் படங்களை வரைய ஆரம்பித்தார். 

                   மைசூர் மகாராஜாவுக்காக வரைந்து தருவதாக உறுதி கூறப்பட்ட ஓவியங்கள் அவை. அவற்றுக்கு ·பினிஷிங் டச்சஸ் எனப்படும் பூர்த்தியைச் செய்வதற்கு மட்டும் அவருக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன. மொத்தம் ஒன்பது ஓவியங்கள். அவற்றுக்கான தொகையாகிய இருபத்தேழாயிரம் ரூபாயைக் கொடுத்தார்கள். 
 ஏழாம் எட்வர்டு மன்னரின் ஆட்சி நடைபெற்றபோது, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அடுத்த பட்டத்துக்குரிய வேல்ஸ் இளவரசராக இருந்தார். அப்போது அவர் சென்னைக்கு வந்திருந்தார். அவர் ரவிவர்மாவைப் பார்க்க விரும்பினார். அதனால் சென்னை கவர்னர் அவரை சென்னைக்கு அழைத்தார். அப்போது அவருடைய மகன் ராமவர்மா பெரியம்மை நோய்க்கு ஆளாகினார். இருப்பினும் கடமையைப் பெரிதாக எண்ணி, சென்னைக்கு ரவிவர்மா வந்தார். அங்கு அவர் சென்னை கவர்னரை விசேஷ உடையலங்காரத்துடன் இருக்கும் நிலையில் வரைந்தார். 

                    ஐந்தாம் ஜார்ஜுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம். அதனால் மைசூர் மன்னர் யானை வேட்டை ஒன்றை ஏற்பாடு செய்தார். 'கெடா' என்னும் முறையில் யானையை விரட்டி, மறைக்கப்பட்டிருக்கும் பெருங்குழிக்குள் விழச்செய்து பிடிக்கும் முறை அது. அந்தக் காட்சியை ஓவியமாகச் சித்தரிக்குமாறு மைசூர் மகாராஜா விரும்பினார். 
                    கிளிமானூருக்குத் திரும்பிய பின்னர் அந்த 'கெடா' ஓவியத்தை ரவிவர்மா பூர்த்தி செய்து அத்துடன் 'வீணை வாசிக்கும் காதம்பரி' என்னும் ஓவியத்தையும் வரைந்தார்.

              1906-ஆம் ஆண்டு செப்டம்பர் 20-ஆம் தேதியெல்லாம் ரவிவர்மாவின் உடல்நிலை மோசமாக ஆக ஆரம்பித்தது. பத்ரிநாத்திலிருந்து இமயமலை மூலிகைகளை அங்கிருந்து மன்னரொருவர் அனுப்பிவைத்தார். 

                    ஓர் அறுவை சிகிச்சையை ரவிவர்மாவுக்குச் செய்தார்கள் . சில நாட்கள் கழித்து மீண்டும் ஓவியம் வரைய முயன்றார். 

                    அக்டோபர் 2-ஆம் தேதி உலகின் பல பாகங்களிலிருந்தும் பெருங்கூட்டம் கிளிமானூரில் கூடியிருந்தது. ராய்ட்டர்ஸ் முதலிய பெரும் பெரும் செய்தி ஸ்தாபனங்கள் பத்திரிக்கைகள் முதலியவற்றின் செய்தியாளர்கள் குழுமியிருந்தனர். இறப்பதற்கு முன்னர் வரைக்கும் அடுத்தாற்போல வரைய நினைத்த ஓவியங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். 

                    மோசமான நீரிழிவு நோயால் அவர் 1906-ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி மறைந்தார். 

                    அவருடைய Portrait ஓவியங்கள், Figuer Study ஓவியங்கள் முதலியவற்றில் நிஜ ஆட்களை வைத்தே பெரும்பாலும் வரைந்திருக்கிறார். முழுக்க முழுக்கக் கற்பனை ஓவியங்களையும் அவர் வரைந்திருக்கிறார். மற்றவர்கள் வரைந்ததைப் போல Landscape, கட்டடங்கள், திருவிழாக்கள் போன்றவற்றை அவர் அதிகம் வரைந்ததாகத் தெரியவில்லை. அவருடைய படங்களில் யாராவது ஆளிருக்க வேண்டும். அதுவும் அது பெண்ணாக இருந்தால் இன்னும் சிறப்பு. அவருடைய மிகப் புகழ்பெற்ற ஓவியங்களில் பெண்கள் முக்கிய இடம் பெறுகின்றனர். 
  இந்திய காவியங்கள்,புராணங்கள், மஹாபாரதம் ஆகியவற்றிலிருந்து பல தீம்களை அவர் எடுத்து ஓவியப்படுத்தியிருக்கிறார்முழுக்க முழுக்க இந்திய subjects; ஆனால் ஓவிய மரபு மேற்கத்தியது. வரையும் முறையும் கணக்குகளும் பெர்ஸ்பெக்டிவ் போன்றவையும் மேற்கத்தியவை. எண்ணெய் வண்ணங்களும் சீலையில் வரையும் முறையும் மேற்கத்தியவை.
                    சாகுந்தலம், நளசரித்திரம், ஹரிச்சந்திரன் கதை, துரௌபதை சம்பந்தமான காட்சிகள், கிருஷ்ணன் தூது, பகீரதன் தவம், சத்தியவான் சாவித்திரி, மார்க்கண்டேய காலகாலன், ராதா கிருஷ்ணா, கிருஷ்ணா யசோதா என்று வரிசை நீளும்.
                    அத்தகைய அழகிய காவியங்களும் கதைகளும் இந்தியர்களிடையே எல்லாமே இருக்கின்றன என்பதை உலகத்தவர் அறிந்து கொண்டதோடு அவற்றில் அத்தனைDynamic and Dramatic -ஆக பல காட்சிகள் இருக்கின்றன என்பதையும் தெரிந்துகொண்டனர்.  வெள்ளைக்காரர்கள் அவ்வாறு நினைக்கிறார்கள் என்றதும் இந்தியர்களும் "ஓஹோ! நமக்கு அப்படியெல்லாம்கூட பெருமை இருக்கிறதோ!" என்று எண்ணி தங்களை வியந்துகொள்ளலாயினர். 
                    ரவிவர்மா ஓவியத்தில் மட்டும் பெர்ஸ்பெக்டிவைப் புகுத்தவில்லை. இந்தியர்களின் மனதிலும் சிந்தனையிலும் ரசனையிலும்கூட புதிய புதிய பல பெர்ஸ்பெக்டிவ்களை ஏற்படுத்திவிட்டார்.

                    அந்தப் பெண்கள் - அதான் அந்த நாயர் பெண்கள், கொங்கணிப் பெண்கள், மராட்டிப்பெண்கள் - அவர்கள் இறந்துபோய் நூறாண்டு காலம் ஆகிவிட்டிருக்கும். ஆனாலும் அவர்கள் எல்லாருமே வாழ்கிறார்கள். 
                    அந்த கோவாக்காரி சுகுணாபாய் சரஸ்வதியாகவும் லட்சுமியாகவும் அமரத்துவம் பெற்றுவிட்டாளல்லவா? 
                    அந்தப் பால்க்காரியின் பார்வை அவளை இன்னும் உயிரோடுதான் அவளைக்  காட்டிக் கொண்டிருக்கிறது.

     சுகுணாபாய்.......        

                    அந்த ஓவியத்தின் தலைப்பே 'மோஹினி'தான்.   எனக்கும்கூட அந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்.

                    அந்தப் பெண்கள் - அதான் அந்த நாயர் பெண்கள், கொங்கணிப் பெண்கள், மராட்டிப்பெண்கள் - அவர்கள் இறந்துபோய் நூறாண்டு காலம் ஆகிவிட்டிருக்கும். ஆனாலும் அவர்கள் எல்லாருமே வாழ்கிறார்கள். 
                    அந்த கோவாக்காரி சுகுணாபாய் சரஸ்வதியாகவும் லட்சுமியாகவும் அமரத்துவம் பெற்றுவிட்டாளல்லவா? அந்தப் பால்க்காரியின் பார்வை அவளை இன்னும் உயிரோடுதான் அவளைக் காட்டிக்கொண்டிருக்கிறது.

                    அவர்கள் மட்டுமா வாழ்கிறார்கள்? அக்காலத்தில் இருந்த அந்தப் பட்டாடைகள், முத்துமாலைகள், பேசரி, கடகம், தோள்வளை, ஒட்டியாணம், கிரீடம்....அனைத்துமே ஒளிர்கின்றன. 
                    அவர் வரைந்த அந்த தெய்வ உருவங்களைத்தான் இப்போதும் மலேசியாவில் கோயில்களில் சுதைச் சிலைகளாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பாணியை மாற்ற அவர்கள் விரும்புவதில்லை.

                    அவருடைய பல படங்கள் பம்பாய் முதலிய இடங்களில் உள்ள தனியார் கலைக் கூடங்களிலும், பரோடா அரண்மனை, மைசூர் அரண்மனை, உதய்ப்பூர் அரண்மனை சென்னை புது டில்லியின் தேசிய கலைக்கூடம், ஹைதராபாத் ஸாலர்ஜங் மியூஸியம் ஆகிய இடங்களிலும் இடம் பெற்றன. திருவனந்தபுரத்திலுள்ள ரவிவர்மா கலைக்கூடத்திலும் சில முக்கிய ஓவியங்கள் இருக்கின்றன.

                    அவருடைய 123-ஆம் வயதை ஒட்டி அவர் நினைவாக ஒரு தபால்தலை வெளியிடப்பட்டது. அதில் அவருடன் அவருடைய 'தமயந்தியும் அன்னமும்' என்னும் படமும் இடம்பெற்றிருக்கின்றன.

                    அவர் உயிருடன் இருந்த காலத்தில் ஒரு படத்தை வரைந்து தருவதற்கு அவர் ஆயிரம் ரூபாய் வாங்கினார்மைசூர் மஹாராஜா வரையச் செய்த ஒன்பது படங்களுக்கு அவருக்கு இருபத்தேழாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். பரோடா மன்னருக்காக வரைந்த பதினான்கு படங்களுக்கு அவர்கள் ஐம்பதினாயிரம் ரூபாய் கொடுத்தார்கள். ஒரு ஓவியருக்குக் கிடைத்த அதிகபட்சத் தொகை அது. கைஸர்--ஹிந்த் என்னும் விருதும் ஓவியராகிய அவர் ஒருவருக்கே கிடைத்தது. 
                    சமீபத்தில் அவருடைய சில ஓவியங்களை ஏலத்தில் விட்டார்கள். 

                    அவற்றில் யசோதா கிருஷ்ணா என்னும் ஓவியம் ஐம்பத்துநான்கு லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்தியாவிலேயே இதுவரைக்கும் அதிகத் தொகைக்கு ஏலம் போன ஓவியம் இதுதான்.  ரவிவர்மா வரைந்த இன்னொரு ஓவியம் சகுந்தலை துஷ்யந்தனுக்குத் தாமரை இலையில் முள்ளால் கடிதம் எழுதுவது. அந்த ஓவியம் பதினைந்து லட்சத்துக்குப் போனது. அவருடைய 'லட்சுமி' ஓவியம் பத்தொன்பது லட்சத்துக்கும் 'சரஸ்வதி' பதினைந்து லட்சத்துக்கும் விற்கப்பட்டன.
    
                    அவருடைய ஓவியங்கள் என்று நிச்சயமாக அறியப்பட்டவை நூற்றுமுப்பது இப்போது இருக்கின்றன. 
                    பல ஓவியங்கள் மக்கிப்போய் அழிந்துபோய்விட்டன
                    அவர் தம் வாழ்நாளில் மொத்தம் எழுநூறு ஓவியங்களை வரைந்தார் என்று சொல்லப்படுகிறது.
                    அந்த ஐந்நூற்று எழுபது ஓவியங்கள் எங்கே?
                    மைக்கலேஞ்செலோ, டாவின்ச்சி போன்றவர்கள் தாம் வரையும் படங்களுக்கென்று ஸ்கெட்ச் நோட்டு வைத்திருந்தார்கள். அவர்களின் ஓவியத்தில் அவர்கள் வரைய நினக்கும் பல பொருள்களையும் கைகள், கால்கள், முகங்கள், மூக்கு போன்றவற்றையெல்லாம் வரைகோடுகளால் அவுட்லைனாக வரைந்து வைத்திருப்பார்கள். பல ஓவியர்களுடைய அப்படிப்பட பல நோட்டுப் புத்தகங்கள் இப்போது கிடைத்திருக்கின்றன. அந்த குறிப்பிட்ட ஓவியரின் மனப்போக்கு எந்தத் திசையில் செல்கிறது; எப்படி அந்த ஓவியத்தை வரைவதற்குத் திட்டம் 
போட்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்யமுடிகிறது
                    ஆனால் ரவிவர்மா அத்தகைய நோட்டுப்புத்தகம் வைத்திருந்தாரா என்பது தெரியவில்லை. ஓர் ஓவியனின் மனோதத்துவத்தை அறிய அத்தகைய புத்தகங்கள் பெரிதும் உதவும்.
                    ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் மதுரை மேலச்சித்திரை வீதியில் மூர்த்தி டெய்லரிங் பேலஸ் என்னும் தையற்கடை இருந்தது. அங்கு அதன் உரிமையாளர் ரவிவர்மாவின் ஒரிஜினல் ஓவியங்கள் இரண்டினை  வைத்திருந்தார். பார்த்திருக்கிறேன். அப்புறம் அவை என்ன ஆயின என்பது தெரியவில்லை.
                    இதுபோல தனியார்களிடம் இருந்து அடையாளம் தெரியாமற் போன ஓவியங்கள் இன்னும் பல, பல இடங்களில் இன்றும் இருக்கக்கூடும்.
                    தேடவேண்டும்.
  ராஜா ரவிவர்மாவைப் பற்றிய தொடரை அவருடைய நூற்றாண்டை ஒட்டி எழுதிப் பூர்த்தி செய்தாயிற்று. 
                    சில ஆண்டுகளுக்கு முன்னர் கூந்தல் அலங்காரம் என்னும் தலைப்பில் அகத்தியத்தில் ஒரு தொடரை எழுதினேன். 
                    அதன் சம்பந்தமாக ரவி வர்மாவைப் பற்றியும் எழுத ஆரம்பித்தேன். ஆனால் முடிக்கவில்லை. 
                    பின்னர் இந்திய ஓவியக்கலையைப் பற்றி எழுத ஆரம்பித்தபோதும் ரவிவர்மாவையும் சேர்க்க நினைத்தேன். அதுவும் நிறைவேறவில்லை. 
                    இரண்டாண்டுகளுக்கு முன்னர் நகுஷன், சகரர், சகரபுத்திரர், பகீரதன் தபஸ், ஆகாசகங்கையை சிவபெருமான் தம் ஜடாமகுடத்தில் இறக்கிக்கொண்டது சம்பந்தமாக ரவிவர்மா ஓவியத்தையும் இணைத்து எழுதினேன். ஆனால் அப்போதும் ரவிவர்மா வரலாற்றை எழுதவில்லை. 
                    ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் நினைத்த காரியம். இப்போது அதை எழுதி, விடாப்பிடியாகப் பூர்த்தி செய்தாயிற்று. 
                    பலருக்குத் தெரியாத விஷயம். 
                    நானும் ஓர் ஓவியன்தான்.
                    'JayBee's Biographical Sketch' என்று போட்டுக்கொண்டதற்குக் காரணம் உண்டு. வேறு சிலரும் ரவிவர்மாவைப் பற்றி எழுதியிருப்பார்கள். ஆனால் இந்தbiographical sketch  ஜேய்பியினுடையது. ஜேய்பியினுடைய பல படிவங்கள் இப்போது நிறையவே திருட்டுப ்போய்க்கொண்டிருக்கின்றன. 
                    ஆகையால் ஒரு Proprietary கைச்சாத்து போட்டுக்கொள்வது நல்லதல்லவா? 

                இந்த மடலைச் சற்றுமுன்னர் பார்க்கும்போது இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

                இதை முதலில் படித்துவிட்டு, அடியில் அடியைப் பிடியுங்கள்.

                ஜடாமுடிக்குப்பேர் போனவர் சிவபெருமான்தான். அவருடைய ஜடாமுடியைப் புகழ்ந்து பாடாத சிவனருட்செல்வர் யார்தான் உளர்?
    
குனித்தபுருவமும் கொவ்வைச்செவ்வாயிற்குமிண் சிரிப்பும்
பனித்த செஞ்சடையும் பவளம்போல்மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடன் எடுத்த பொற்பாதமும்காணப்பெற்றால்
மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!

                    அந்த சடையை அவர் மகுடத்தைப்போலவே அழகாக எடுத்துக்கட்டி வைத்திருப்பார். பழஞ்சிற்பங்களில் அந்த வடிவில் காணலாம்.

                    சென்ற நூற்றாண்டில் ராஜா ரவிவர்மா  அவருடைய  காலமரபுக்கேற்ற வகையிலும் அவருக்குத் தோன்றிய வகையிலும் ஓவியங்களை வரைந்து வைத்துவிட்டார். அவர்தான் சிவனுக்கு சிறிய முறுக்குமீசை, திறந்த நெற்றிக்கண், சீக்கியர்கள்போல் மேல்குடுமி என்றுஉருவாக்கிவிட்டார். 
                    இன்னும்பல சேதங்களை அவர் இந்தியஓவியமரபுக்குச் செய்திருக்கிறார்.
                    ஆனால் அதேவேளையில் அவர் அதனை modernise செய்தார் என்ற உண்மையையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். Depth and perspective, புதிய வண்ணக்கலவை முதலியவற்றை அவர் இந்திய ஓவியத்தில் புகுத்தியிருக்கிறார்.

                சடாமுடிக்குத் திரும்புவோம். 

                காளமேகப்புலவர் எமகண்டம் பாடியபோது, திருமலை ராயனின் அறுபத்துநான்கு தண்டிகைப்புலவர்களில் ஒருவர், 
            "குடத்திலே கங்கை அடங்கும்", 
என்ற சமிசை தந்து அதனை ஈற்றடியாக வைத்துப் பாடச் சொன்னார்.

காளமேகம் பாடியது :

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை
இடத்திலே வைத்த இறைவர் சடாம
குடத்திலே கங்கை அடங்கும்!

                இதில்,
"சடாமகுடத்திலே கங்கை அடங்கும்"
என்பதனை வரிப்பிளந்து 
"......சடாம---குடத்திலே கங்கை அடங்கும்" 
என்று பாடி சாதனை புரிந்துள்ளார்.
                மதுரையின் சொக்கனாக வீற்றிருக்கும் சிவனுடைய திருப்பெயராகத்தான் பாண்டியர்கள் தங்களின் பட்டங்களில் ஒன்றைக் கொண்டுள்ளார்கள். 
                சொக்கப்பெருமானே சுந்தரேஸ்வரராக வந்து பாண்டியகுமாரியாகிய மீனாட்சியை மணந்து சுந்தரபாண்டியன் என்னும் பெயருடன் பாண்டியநாட்டை ஆட்சி புரிந்ததாகத் திருவிளையாடல் புராணம் கூறும். பிற்காலத்தில் பாண்டியர்கள், "சடையவர்மன்", "மாறவர்மன்" என்னும் இஇரண்டு பட்டப்பெயர்களைத் தங்களின் பெயர்களின்முன் சேர்த்துக்கொள்வதை மரபாகக்கொண்டார்கள்.
                வடமொழியில் விளங்கும் சாசனங்களில் "ஜடாவர்மன்" என்றுகாணப்படும்.
















No comments:

Post a Comment